கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி டிசம்பர் 6,புதன் கிழமை அன்று வருகிறது. மூஞ்சூரு வாகனத்தில் அமர்ந்து, நம்மை ரட்சிக்கும் விநாயகப் பெருமானை விரும்பாதவர்கள் இல்லை.
ஆனை முகத்தோனை அனைவரும் விரும்பக் காரணம்
பானை வயிற்றோடு, யானை முகத்தோடு அமர்ந்திருக்கும் அண்ணலை யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் அவரின் இத்தகைய தோற்றம் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஒன்று..
விநாயகர் முழு முதற் கடவுள். அவரை வணங்காமல் எந்தவொரு சுப காரியமும் ஆரம்பிப்பதில்லை. எனவே, அவர் எல்லோருக்கும் பிரியமான கடவுளாகத் திகழ்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி அன்று விரதமிருப்பது மிகவும் நல்லது. விநாயகர் விரதமிருந்து தன்னை வழிபடும் அன்பர்களின் துயர் துடைப்பதோடு, அவர்கள் வேண்டிக் கேட்கும் வரங்களை நல்குகிறார்.
மூஞ்சூரு விநாயகப் பெருமானின் வாகனமானது எப்படி?
மூஞ்சூரு பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக உள்ளது .விநாயகப் பெருமான் பார்க்கப் பெரியவராக இருக்கிறார். சிறிய மூஞ்சூரு மேல் பெரிய உருவத்துடன் விநாயகர் அமர்ந்து இருப்பது ஒரு விந்தையான காட்சியாகும்.
இதன் பின்னணியில் ஒரு புராணக் கதை உள்ளது.
கணேச புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டு உள்ளது..
இந்திர சபையில் கிரௌஞ்சன் என்றொரு கந்தர்வன் இருந்தான். அவன் அருமையாகப் பாடக் கூடியவன். கிரௌஞ்சன் ஒரு நாள் வாமதேவர் என்ற முனிவர் காலினை மிதித்து விட்டான். கோபம் கொண்ட முனிவர் கிரௌஞ்சன் எலியாக மாறி விடுவான் எனச் சபித்தார்.
கிரௌஞ்சன் முனிவரிடம் தன்னை மன்னிக்குமாறு மிகவும் கெஞ்சியதால் முனிவரும் சாந்தமானார். தனது சாபத்தை மாற்ற முடியாது என்று கூறிய முனிவர் கிரௌஞ்சன் எலியாக மாறினாலும், அவன் விநாயகருக்கு வாகனமாக திகழ்வான் எனக் கூறினார்.
கிரௌஞ்சன் எலியாக மாறி, பராசர முனிவரின் ஆஸ்ரமத்திற்கு அருகில் இருந்தான். உருவத்தில் மிகவும் பெரியவனாக இருந்த அவன் அருகில் இருந்த எல்லோரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான்.
ஒரு நாள் பராசரின் ஆஸ்ரமத்திக்கு வந்த விநாயகப் பெருமான் கிரௌஞ்சனின் கொட்டத்தை அடக்க நினைத்தார். அவனை வீழ்த்தி, அவனை தனது வாகனமாக்கிக் கொண்டார். இவ்வாறு கிரௌஞ்சன் பிள்ளையாரின் வாகனமாகி அழியாப் புகழ் பெற்றான்.
பிள்ளையாரின் ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கும் போது சங்கடஹர சதுர்த்தி அன்று அவரை வணங்கி,அவர் அருள் பெறுவது நலம் விழைவிக்கும் அன்றோ?
சங்கடஹர பற்றிய இந்த கதைகள் தெரியுமா?
Leave a Reply