சிவதாண்டவ மகிமை

ஆடி மாத தேய்பிறை பிரதோஷம் ஜூலை 21 அன்று வருகிறது.

பிரதோஷ வேளையை  நினைத்தால் சிவனாரின் பிரதோஷ நர்த்தனம் நமது மனக்கண்ணில் தோன்றுகிறது. அன்னை கௌரியை ரத்ன சிங்காசனத்தில் அமர்த்தி அவர் நந்தியின் கொம்புகளில் ஆடும் காட்சியை மனதில் இருத்தி பார்த்தால் அந்த அனுபவமே தனி.

 

Siva Thandavam

 

சிவதாண்டவத்தின் மகிமை

 

சிவ தாண்டவம் சிவனாரின் நடன திறமையை வெளிப்படுத்துகிறது. அவர் இந்த உலகத்தை தனது நாட்டியத்தின் மூலம் இயக்குவதை சுட்டிக் காட்டுகிறது. சிவனார் இந்த பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியவர். உருவாக்குதல், காத்தல், அழித்தல், மாயை, முக்தி ஆகிய ஐந்து தத்துவங்களையும் தன்னுள் அடக்கியவர். அவரது நடனம் இந்த அனைத்து தத்துவங்களையும் விளக்கும் வண்ணம் அமைந்து உள்ளது. இந்த உலகத்தை ஆட்டி வைக்கும் நடனமே சிவதாண்டவம். எல்லாவற்றையும் உருவாக்கி, பின்னர் அழித்து, மனிதனை மாயையிலிருந்து விடுவித்து, முக்தி அளிப்பவர் சிவன். இதையே சிவதாண்டவம் உணர்த்துகிறது.

 

சிவ தாண்டவம் இரு வகைப்படும்:

 

     ருத்ர தாண்டவம்,

 

     ஆனந்த தாண்டவம்

 

ருத்ரம் என்றால் கோபம்.ருத்ர தாண்டவம் சிவனாரின் கோப நடனத்தை குறிக்கிறது. உருவாக்கி, காக்கும் எம்பெருமான் எல்லாவற்றையும் அழிக்கும் நேரம் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அவரது ருத்ர நர்த்தனம் வேகமான நடன  அசைவுகளும், சிவனின் சக்தியை வெளிப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்து உள்ளது. சிவனாரின் ருத்ர நடனத்தை கண்டு நடுங்காதவர் இல்லை.

 

சிவன் ருத்ர தாண்டவம் ஆடியதற்கு  பின்னணியில்  ஒரு கதை உண்டு. அன்னை சதி தேவி தனது தந்தை தக்ஷனின் யாகத்தில் பங்கெடுக்க சென்று அவமானப்பட்டாள். அவமானம் தாங்க முடியாமல் தன்னைத் தானே எரித்துக்  கொண்டாள் சதி என அறிந்த சிவன் சினம் கொண்டு ருத்ர தாண்டவமாடினார்.

 

சிவனாரின் சினம் தணிந்து மோன நிலை அடைந்து சந்தோஷ சாகரத்தில் மூழ்கி  நடனமாடுவதற்கு  ஆனந்த தாண்டவம் எனப் பெயர்.

 

Pradosha thandavam

சந்த்யா தாண்டவம்

 

சந்த்யா தாண்டவம் சிவன் பிரதோஷ வேளையில் அன்னை கௌரியின் முன் நடனமாடுவது. அன்னை கௌரி ரத்ன சிங்காசனத்தில் அமர்ந்திருக்க, நந்தியின் கொம்புகளில் ஆடும் சிவனாரின் நடனத்திற்கு சரஸ்வதி வீணை வாசிக்க, லக்ஷ்மி பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, விஷ்ணு மிருதங்கம் வாசிக்க, பிரம்மா லயத்தினை கவனித்துக் கொள்கிறார். மற்ற தேவ தேவர்கள் சூழ்ந்திருந்து இந்த காட்சியை கண்டு களிக்கிறார்கள்.இதை விட தெய்வீகம்  நிறைந்த காட்சி உண்டோ? மனதில் நினைக்கும் போதே பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறதே?

 

சிவனாரின் கட்டளைப்படி அவரது பணியாளர் தண்டு  பரத முனிவருக்கு நாட்டிய லக்ஷணங்களை எடுத்து கூறினார்.இதனை பின்பற்றி பரதர் ஏற்படுத்திய நாட்டிய  கலையே பரதநாட்டியம்.

 

பிரதோஷத்தின் தனி மகிமை அறிந்த பிறகு அந்த வேளையில் சிவனை முழு மனதோடு வணங்கி அவர் அருள் பெறலாமே?

 

 

 

 

 

 

 

 

 

 
service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    3 + 2 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.