ராம மந்திரம் வாழ்க்கையின் தாரக மந்திரம். ராம நாமம் ஜபித்தோருக்கு முக்தி உண்டு. ராம ஜபத்தை தாண்டி வேறு ஒன்றில்லை. இவை எல்லாம் நாம் அறிந்ததே. இத்தகைய உயர்ந்த பெரியோனாம் ராமனின் பிறந்த தினமாம் ஸ்ரீ ராம நவமியை நாம் விமரிசையாகக் கொண்டாடுவதும் அதனை பற்றிய சிறப்பு செய்திகளை தெரிந்து கொள்ள விழைவதும் இயற்கைதானே?
தசரத குமாரனாம் ரகுராமன் ஈடு இணை இல்லாதவர். சிறந்த மகனாக, ஏக பத்தினி விரதனாக, நல்ல தமையனாக, எல்லாம் அறிந்த சான்றோனாக திகழ்ந்தவர். தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமாக மஹா விஷ்ணுவின் அம்சமாக விளங்குபவர்.
ராவணனாம் கொடிய அரக்கனை அழிக்கவே மானிட உருவெடுத்து வந்தவர். மனிதனாய்ப் பிறந்தவரைத் தவிர யாராலும் கொல்லப்பட மாட்டான் இராவணன் - இது பிரம்மா அவனுக்கு அளித்த வரம். அதற்காகவே இந்த பூமியில் மனிதனாய் பிறந்து, சீதையை மணந்து காவியம் படைத்தவர் ராமன்.
ராம காவியங்கள் பல. அவற்றுள் நெஞ்சை அள்ளுபவை கம்பர் படைத்த கம்ப ராமாயணமும் வால்மீகியின் காவியமும். வட இந்தியர்கள் துளசிதாசரின் ராம சரித மானசை வெகுவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஸ்ரீ ராம நவமி சித்திரை (மார்ச்-ஏப்ரல்) மாதத்தில் வளர் பிறை நவமி அன்று புனர்பூசம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று கோயில்களில் மேள தாளத்தோடு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ரகு வம்ச ராஜா தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ராமனையும் மற்ற மூவரையும் பிள்ளைகளாக பெற்ற கதை நாம் அறிந்ததே. ராமர் பிறந்த தினமே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராம நவமி அன்று தென் இந்தியாவில் சீதா கல்யாண உத்சவம் நடக்கிறது. வசந்த நவராத்திரியின் கடைசி நாளும் இதே. ஸ்ரீ ராம நவமி ஜாதி மதத்தை தாண்டிய உத்சவம். உண்மையை கொண்டாடும் யாரும் ராமனின் பெருமை உணர்ந்தவரே. அதனால் ராமனின் பிறந்த தினத்தை மகிழ்வோடு கொண்டாடுவார்கள். இந்த வருடம் ஸ்ரீ ராம நவமி ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி (5.4.2017) கொண்டாடப்படுகிறது.
ராமா என்னும் மந்திரத்தை சாவின் வாயிலில் உச்சரித்தால் மரணத்தின் பிடியில் கூட நன்மை கிடைக்கும். நரக வேதனை இன்றி வைகுண்ட பதம் கிடைக்கும். இந்த நாமத்திற்கு அப்படி ஒரு மகிமை. என்னவென்று தெரியுமா?
ராம என்பதில் ‘ரா’ என்பது நாராயணனைக் குறிக்கும். ’ம’ என்பது மகாதேவனைக் குறிக்கும். இரண்டையும் சேர்த்து சொல்லி பாருங்கள்- ராம. ஆம், இந்த இரண்டு எழுத்துகளை வைத்து நாம் மகாவிஷ்ணுவையும், சிவனையும் தொழுகிறோம்.
ர என்ற எழுத்து ரவியைக் குறிக்கும்.அதாவது சூரியனைக் குறிக்கும். ராமனோ ரகுவம்சத்தை சேர்ந்தவர். அதாவது சூரிய வம்சத்தை சேர்ந்தவர். ராம மந்திரத்தை சொல்லும் போது சூரியன் நமக்கு சக்தியை அதிகரிக்கிறார். சூரியன் சக்தி வடிவானவர் தானே. அதனால் தான் சில கோவில்களில் ராம நவமி அன்று சூரிய வழிபாடு உண்டு.
ராம நாமம் தாரக மந்திரம். மந்திரம் என்றால் சக்தி எனப் பொருள். தாரக என்றால் நம்மை கரை சேர்க்க கூடியது எனப் பொருள். நம்மை பாபமாகிய சாகரத்திலிருந்து கரை சேர்க்கக்கூடிய தாரக மந்திரமே ராம நாமம்.
‘ர’ என்பது அக்னியை சார்ந்த ஒலி. ‘ம’ என்பது அகண்ட தத்துவம். ராம என்று சொல்லும் போது நாம் அக்னி மூலமாக ஒரு ஆஹுதியை அகண்ட பரம் பொருளுக்கு சமர்ப்பிக்கிறோம். (ர மற்றும் ம ஒலிகளை நாம் மந்திரங்களில் காண முடியும்- க்ரீம், க்ரூம், ஔம்).
ஆக ராம நாமத்தை ஜபித்தால் நமக்கு வாழ்வில் தடை கற்களும் இல்லை, முக்தி நிலை உறுதி, மனதில் அமைதியும் கிட்டும். இது மட்டுமா?
ராம நாமத்தை உச்சரிப்பதன் பலன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதற்கு ஒப்பானது
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.
ராமன் மரியாதைக்குரியவர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வாழ்ந்தவர். தாய் அன்பு புரிந்தவர். மனைவியிடம் நேசம் கொண்டவர். தனது ராஜ்யத்தை செவ்வனே ஆண்டவர். மக்களுக்காக மனைவியை துறந்தவர். கொள்கைவாதி. எந்த ஒரு சூழ்நிலையையும் கண்டு அஞ்சாதவர்.
தாய் கைகேகி காடு செல்ல மன்னன் உத்தரவிட்டதை கூறிய போதும் அஞ்சாதவர். ராவணன் சீதையை கவர்ந்து சென்றதை கேட்டும் மனம் கலங்காதவர். வானர சேனை கொண்டு ராவண சேனை வென்ற வீர புருஷர். வினயத்தின் இருப்பிடம். மானிடனாக அவதரித்த மகாவிஷ்ணு. இப்பெருமானின் பிறந்த தினத்தை கொண்டாடுவதே ஒரு பெரிய பாக்கியம்தானே.
ஸ்ரீ ராம நவமி தினத்தன்று காலையிலேயே கோயில் சென்று ராமனைத் துதித்தால் இம்மையின் பாபம் தொலையும். இன்றைய தினம் துளசி தாசர் மற்றும் வால்மீகி எழுதிய இராமாயண கதையை கூறுபவர்கள் உண்டு. அகண்ட ராமாயணம் மற்றும் சுந்தர காண்டம் படிப்பவர்கள் உண்டு. அதை காதால் கேட்டாலே நன்மை. அயோத்தி போன்ற இடங்களில் ரத யாத்திரை உண்டு. அதில் ராம, லக்ஷ்மண, சீதா மற்றும் ஹனுமான் உருவ சிலைகளை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.
ராம நாடகம், பஜனை மற்றும் பாடல்கள் ஸ்ரீ ராம நவமியின் சிறப்பு அம்சங்கள். பட்டி தொட்டிகளிலும் ராம கதை தெரிந்த ஒன்று, அதனை பாடிய இதயங்கள் பல உண்டு என்பதால் ஸ்ரீ ராமநவமி அன்று ராம காவியம் பாடாத இதயம் இல்லை. அன்று இறுதியாக வாண வேடிக்கை நடக்கும்.
ஸ்ரீ ராம நவமி விரதம் மிக விசேஷமான ஒன்று. ராம நாமம் இம்மையில் நன்மை பயக்கும் இரண்டெழுத்து மந்திரமாக அமையும் போது ராம நவமி விரதம் முக்திக்கு வழி தரும் என்பதில் ஐயமென்ன? இந்த விரதத்தை பகல் வரை இருப்பவர் உண்டு, நடு இரவு வரை காப்பவர் உண்டு. ஒரு வேளை உணவு உண்பவர் உண்டு. பாலும் பழங்களும் மட்டும் உண்பவர் உண்டு. ராம நவமியின் ஒன்பது நாள் கோலாகலத்தில் ஒன்பது நாளும் விரதமிருப்பவரும் உண்டு.
அயோத்தி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் ராம நவமி மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தி ராமம் பிறந்த இடம். அங்கு சென்று சரயு நதியில் குளித்து ராமனை தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். ரிஷிகேஷ் ராம வழிப்பாட்டிற்கு சிறப்பான இடம். அங்கும் பக்தர்கள் திரளாக சென்று ராம நவமி அன்று ராமனை வழிபடுகிறார்கள். ராமேஸ்வரத்தில் கடலில் ஸ்நானம் செய்து இராமநாதரை வழிபடுவதையும் புனிதமாக கருதுகிறார்கள்.
ஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீராமரை ஜபித்து ஆன்ம சக்தியும், மன வளமும், வாழ்வில் உன்னதமும் பெறுவோமாக.
எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply