பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் உத்திர பல்குனி நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து இருக்கும் நாளில் வருகிறது. தெய்வங்களின் திருமண நாளாக பங்குனி உத்திரம் அமைத்துள்ளது..
இந்த வருடம், 2018 - ல், மார்ச் 30 , வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.
சிவன் பார்வதி, முருகன் தெய்வானை (கந்த புராணம்), ராமர் சீதா (வால்மீகி ராமாயணம்), ஆண்டாள் ரெங்கமன்னார், நாராயணன் கோமளவல்லி நாச்சியார் ஆகியோரின் திருமணம் நடந்த நாளாகும். ஐயப்பனின் பிறந்த நாளாகும். எனவே ஐயப்ப ஜெயந்தி எனவும் அழைக்கப்படும்.
அன்னை மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தேவர்களும் அசுரர்களும் அமிருதம் கடையும் போது எழுந்தருளியதாக சொல்லப்பட்ட நாளும் இதே. அன்னை பார்வதி சிவனை காஞ்சிபுரத்தில் மணந்த நாள். ஆகையால் பங்குனி உத்திரத் திருநாளுக்கு கௌரி கல்யாணம் எனவும் பெயர் உண்டு.
இந்த நாளில் புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியில் உள்ள ஏழுபுனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது.
பங்குனி உத்திரத்தை ஒரு பெரும் விழாவாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்ற விரதமிருந்து பாத யாத்திரை மேற்கொண்டு பழனியிலும் மற்ற முருகன் ஸ்தலங்களிலும் பக்தர்கள் குவிகிறார்கள். பக்தர்கள் பால்குடம், காவடி எடுப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
பழனியின் தண்டாயுதபாணியும் வடபழனி முருகனும் விசேஷக் கோலம் கொண்டு அருட் காட்சி அளிக்கும் அற்புத நாளாகும் இது.
மேற் கூறிய செய்திகளே பங்குனி உத்திர நன்நாளின் சிறப்பை எடுத்து கூறும் விதமாக உள்ளன. தேவ தேவியரின் திருமண வைபவம் மனதை கவருபவை மட்டும் அல்ல. திருமணம் நடந்த நாளுக்கு சிறப்பு சேர்ப்பவை. ஏனெனில் அவை தெய்வத் திருமணங்கள். அன்றைய நாளில் தெய்வங்களை தொழுதால் நம் திருமண வாழ்க்கை இனிக்கும் என்பது நிச்சயமே. திருமணமாகதவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் என்ன?
திருமணம் ஆகியும் பல தடைக்கற்களை சந்திப்போருக்கும்,பொறாமை போன்ற கெட்ட சக்திகளால் பாதிக்கப்படுவோர்க்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பது நிச்சயம். செவ்வாய் தோஷம், கணவரின் நெடு நாள் நோய் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பது நலம்
சிவாலயங்களிலும், முருக ஸ்தலங்களிலும்,தெய்வங்களின் திருமணம் நடைபெறும் நாள் பங்குனி உத்திரம். மயிலை கபாலீஸ்வரர், வடபழனிஆண்டவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ,பழனி தண்டாயுதபாணி ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
ஸ்ரீரங்கத்தில் அன்னை மகாலக்ஷ்மியின் சந்நிதியில் ரங்கநாதரும் அவருடன் சேர்ந்து எழுந்தருளியுள்ள திருக்கோலம் காணக் கிடைக்காதது. அப்போது ராமானுஜர் இயற்றிய துதிக்களை பாடுவது வழக்கம்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நூறு தூண் கொண்ட மண்டபத்தில் எழுந்தருளி உள்ள பெருமான் முன் ஸ்தல புராணத்தை படித்து ஏழு நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம். இறுதியில் உத்சவம் சேரகுல (மலையாள) நாச்சியார் விஷ்ணுவை திருமணம் முடிக்கும் காட்சியோடு முடியும்.
பழனியின் ரத ஊர்வலமும் மதுரை கள்ளழகர் கோயில் விழாவும் பிரசித்தி பெற்றவை. மதுரையில் பங்குனி உத்திரத்தை கோடை வசந்த உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அதே போல் கோயம்பத்தூரின் அருகே இருக்கும் பேரூரில் பங்குனி உத்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் மயிலையில் எழுந்தருளி உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் சேவை மிகவும் விசேஷமானது.பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாள் வீதி உலாவில் அறுபத்து மூன்று நாயன்மார் கபாலீஸ்வரரை எதிர்கொள்ள சிவன் பவனி வரும் காட்சி கண் கொள்ளாதது. கோடையின் தாகம் தணிக்க மக்கள் தண்ணீர் பந்தல் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி பக்தர்களுக்கு சேவை செய்கிறார்கள். மற்றும் முண்டக்கண்ணி அம்மன்,கோலவிழி அம்மன், வைரமுடி சுவாமி, திருவள்ளுவர் வாசுகி ஆகியோரின் மூர்த்திகளும் இந்த உத்சவத்தில் இடம் பெறும்.
இந்த எல்லா கோயில்களிலுமே கல்யாணமண்டபத்திற்கு மூர்த்திகளை நீராட்டி எடுத்து சென்று திருமணம் செய்விக்கிறார்கள். இதனை காணும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிட்டுகின்றன.
மற்ற மாநிலங்களில் பங்குனி உத்திரம் கங்கா மேளா, வசந்த உத்சவம், வசந்த பஞ்சமி, மஞ்சள் குளி, டோல் பௌர்ணமி என அழைக்கப்படுகிறது
பங்குனி உத்திரம் அன்று காலை குளித்து,கோயில் சென்று இறைவனை தொழுது நாள் முழுக்க விரதமிருந்து சாயந்திரமாக கோயில் சென்று வந்து விரதம்முறிப்பார்கள். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால் பழம் உண்டு இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் வளமும், செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பதில் ஐயமில்லை. 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் பிறவி பிணி நீங்கும் என்பது கருத்து.
பங்குனி உத்திரம் அன்று தெய்வத் தம்பதிகளைத் தொழுது வாழ்வின் இன்னல்களை களைவோம்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply