हत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः॥
- Bhagavad Gita - Chapter 10 Slokam 35
ஸாமங்களிலே பிருஹத் ஸாமம் யான்சந்தங்களில் யான் காயத்ரிமாதங்களில் மார்கழி யானேருதுக்களிலே யான் வசந்தம்தான். - அத்(10,35)
மாதங்களில் நான் மார்கழி என்றார் கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில். மார்கழி என்றால் அழகிய கோலங்கள், அருமையான காலை வேளைக் குளியல், அற்புதக் கடவுள் தரிசனம் என அறிந்துள்ள நமக்கு மேலும் பல உண்மைகளை எடுத்து தரவே இந்த கட்டுரை.
மார்கழி மாதத்தின் உன்னதம்
மார்கழி மாதம் சுக்ல ஏகாதசியுடன் தக்ஷிணாம்யான காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. மிருகசீருஷ நக்ஷத்திரத்தின் பெயரின் அடிப்படையில் இதற்கு மார்கழி என்ற பெயர் வந்தது. மேலும், இந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு தை மாதம் ஒன்றாம் தேதி செல்கிறார். இதனால் இந்த மாதத்திற்கு தனுர் மாதம் எனவும் பெயருண்டு.
தேவர்கள் தொழும் நேரம்
தேவர்களுக்கு நமது ஒரு வருடம் ஒரு நாள் கணக்காகும். மார்கழி மாதம் அவர்களுக்கு பிரம்ம முஹுர்த்தமாக அமைகிறது. அதிகாலை நான்கு அரை மணியிலிருந்து ஆறு மணி வரை அமையும் இந்த நேரம் அவர்கள் கடவுளை வணங்கும் நேரமாகும். எனவே மார்கழி மாதம் தேவர்கள் கடவுளை வணங்கும் நேரம். நாமும் அந்த பிரம்ம முஹுர்த்தத்தில் மார்கழி மாதத்தில் குளித்து, கோலமிட்டு, வீட்டை தூய்மை செய்து, கோயில் சென்று இறைவனை வழிபட்டால் நமக்கு நன்மைகள் பல நிச்சயம் கிடைக்கும்.
இன்னுமொரு புராண செய்தியும் மார்கழியின் மகிமை விளக்கும். தஷிணாம்யான காலத்தின் அதிபதியான தேவதை ரட்ரி தேவி, ஏனைய தேவர்களோடு சென்று பகவான் விஷ்ணுவிடம் இந்த காலத்தை மக்கள் இருட்டடிப்பு செய்யக் கூடாது . அதற்காக தான் தவமிருந்து கடவுளை இந்த காலத்தில் வேண்டுவதாகக் கெஞ்ச, பகவானும் அவ்வண்ணமே ஆகும்படி தக்ஷிணாம்யான காலத்தை புண்ய காலமாக்கினார். மார்கழியில் தன்னை வணங்குவோருக்கு வாழ்கையில் பல நன்மைகள் கிடைக்கும் என இயம்பினார். மக்களும் பஜனை,கோயில் வழிபாடு மூலம் இப்பலன்களை பெறுகிறார்கள்.
அதிகாலையில் சுத்தமான காற்று கிடைக்கும். மார்கழியின் அதிகாலையோ அதி உன்னதம். தூய்மையான ஆக்சிசன் நிறைந்த காற்றை கோலமிடும் போதும் ,கோயில் செல்லும் போதும், வீதிகளில் பஜனை செய்யும்போதும் மார்கழி மாதத்தில் மக்கள் சுவாசிக்கிறார்கள். மார்கழி மாதம் ஓஜோன் லேயர் நம் பூமியின் மிக அருகில் இருப்பதே இதன் காரணம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
ஆண்டாள் நோற்ற திருப்பாவையும், மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையும் மார்கழிக்கு அணிகலன்கள். ஆண்டாள் ஆழ்வார்களில் ஒருவர். ரெங்கமன்னார் எனப்படும் மகாவிஷ்ணுவின் கரம் பிடிக்க நோன்பு இருந்தவர். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பாவை பாடி பாவை நோன்பு இருந்து கூடாரவல்லி (மார்கழி 27) அன்று இறைவனிடம் கலந்தவர். ஆண்டாளைப் போற்றும் விதமாக மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொல்வது வழக்கமாக உள்ளது. கோயில்களில் அதிகாலை திருப்பாவை முழக்கம் காதுக்கு இனிமையையும் மனதில் பக்தியையும் தூண்டும். திருமணமாகாத பெண்கள் நல்ல கணவனைத் தருமாறு வேண்டி திருப்பாவை படிக்கும் நேரமிது.
மாணிக்கவாசகர் இறைவன் சிவபெருமானின் சிறந்த பக்தர். அவர் சிவனை திருவெம்பாவை பாடல்கள் மூலம் துதி செய்கிறார். சிவாலயங்களில் மார்கழி மாதம் அதிகாலை திருவெம்பாவை முழங்குவது வழக்கம். திருவாதிரை நக்ஷத்திரத்தன்று இறைவனின் ஆரூட தரிசனம் கண்டு களி சமைத்துப் படைப்பது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசி
மார்கழியில் வரும் ஏகாதசி மிகவும் முக்கியமானது. இது வைகுண்ட ஏகாதசி ஆகும். பள்ளி கொண்ட ரெங்கநாதரை தரிசனம் செய்ய ஏகாதசி இரவு முழுவதும் கண்விழித்து, பிரார்த்தனை செய்து ,அதி காலை கோயிலில் சொர்க்க வாசல் திறக்கும் போது பள்ளி கொண்ட பரந்தாமனை தரிசனம் செய்தால், முக்தி நிச்சயம். இதையே ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து, பகல் பத்து என உத்சவமாகக் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீரங்கநாதரை வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் அதிகாலை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.
ஆகவே ,மார்கழியின் குளிரைப் பாராட்டாமல், அதிகாலை எழுந்து, உடலையும்,வாசலையும் தூய்மைப்படுத்தி ,கடவுளைப் போற்றித் தொழுதால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
கர்நாடக இசை பிரியர்களே ! நீங்களும் மார்கழி இசை மழையில் நனையத் தயார் ஆகி விட்டீர்களா?
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply