கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டு
கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னையை (நீளாதேவியை) மணந்தார் என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.
.நீளாதேவி, யசோதையின் சகோதரர் கும்பனின் மகள் நப்பின்னையாக அவதரித்தார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் மனைவியர் ஆவர். கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியும், வராக அவதாரத்தில் பூதேவியும், ராமாவதாரத்தில் ஸ்ரீதேவியும் அவதரித்தனர்.
தேனினுமினிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் “கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டிற்கு” சான்றாக அமைந்திருக்கும் பாசுரமாவது :
தோளிசேர் பின்னை பொருட்டு எருதேழ் தழீஇக்
கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாளினை மேலணி தண்ணனந்துழாயென்றே
நாளுநாள் நைகின்றதால் என்தன் மாதரே
இப்பாடலில், “எருதேழ் தழீஇக் கோளியார்” என்ற தொடர் “ஏழு எருதுகளை வீரமாக அடக்கியவர்” என்று கிருஷ்ணரை குறிப்பிடுகிறது.
த்வாபர யுகத்திலேயே எருதுகளை அடக்கி வீரத்தினை வெளிப்படுத்துவது வழக்கத்திலிருந்தது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
நம்மாழ்வார்
நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய 12 ஆழ்வார்களில், முக்கியமானவராக கருதப்படுபவர் நம்மாழ்வார். பிறந்தது முதல் வாய்பேச முடியாமல் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரால் ஆட்கொள்ளப்பட்டு, பல பாசுரங்களை பாடினார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 1352 பாசுரங்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டவை. ஸ்ரீரங்கத்தில் அரவையர் சேவை, நம்மாழ்வாரை சிறப்பித்து சேவை சாதிக்கப்படுகிறது.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை எடுத்துரைக்கும் 4000 தமிழ் பாசுரங்களைக் கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், 12 ஆழ்வார்களால் பாடப்பட்டு, நாதமுனி என்பவரால் 9-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழ் வேதம் என்று போற்றப்படும் திவ்ய பிரபந்தம், அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும், வைஷ்ணவர் இல்லத் திருமணங்களிலும் இன்றும் பாடப்பட்டு வருகிறது.
Leave a Reply